மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் ’டெல்லி சலோ’ போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த பத்து நாள்களாக டெல்லி, புராரி பகுதியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த நவ.26ஆம் தேதியன்று போராட்டம் தொடங்கியபோது, விவசாயப் போராட்டக் குழுக்களைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் காவல் துறையினர் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். மேலும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, விவசாயிகளை விரட்ட முயன்று அது முடியாமல் போகவே காவல் துறையினர் தடியடி நடத்தினர். எனினும், டெல்லிக்குச் செல்வதில் விவசாயிகள் உறுதியாக இருந்த நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்கு காவல் துறை அனுமதி அளித்திருந்தது.
இதனிடையே, நாடு முழுவதும் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அந்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) பொதுச் செயலாளர் டி.ராஜா, “நாடு முழுவதும் போராடிவரும் விவசாயிகள் மிகவும் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர். அவர்களுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறும் வரை அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை.
விவசாயிகளால் எழுப்பப்படும் கோரிக்கைகள் பற்றி விவாதிக்க ஒரு சிறப்பு நாடாளுமன்ற அமர்வு நடத்தப்பட வேண்டும். ஜனநாயக விரோத வழியில் தான் இந்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசுக்கும் விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இரு தரப்பினரும் ஐந்தாவது முறையாக இன்றும் சந்தித்துள்ளனர். விவசாய சங்கங்களின் தலைவர்களை சந்திப்பதற்கு முன்பு, மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடியை காலையில் அழைத்து நிலைமை குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.
இதனைக் கொண்டுவருவதற்கு முன்னர் மத்திய அரசு விவசாயிகளுடன் கலந்துரையாடியிருக்க வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக இந்த விவகாரத்தை அரசு விவாதித்திருக்க முடியும். அதை அப்போதெல்லாம் செய்யாமல், இப்போது விவசாயிகளிடம் ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரிவிக்கச் சொல்கிறார்கள்.
விவசாயிகள் தங்கள் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோருகிறார்கள் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த வேளாண் சட்டங்கள் தங்களுக்கோ அல்லது இந்த நாட்டின் வளர்ச்சிக்கோ உதவப்போவதில்லை என்பதை விவசாயிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த விவசாய சட்டங்கள் இந்தியாவில் விவசாயத் துறையை பாதிக்கும் என்று அவர்கள் கூறுவதை நாம் மறுக்க முடியாது.
இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், ஒட்டுமொத்த விவசாயமும் பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் விவசாய வணிக நிறுவனங்களின் கட்டளையின் கீழ் கொண்டு செல்லப்படும். அவர்கள் விவசாயிகளின் நலனை முற்றுமுழுதாக புறக்கணிப்பர். அவர்கள் விவசாய உற்பத்திப் பொருள்களின் விலையை நிர்ணையிக்கும் உரிமையைப் பெற்றிருப்பதால் தான் எம்.எஸ்.பி பற்றிய கேள்வி எழுப்பப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க : மதிப்பீடு தவறாகிவிட்டது! - தேர்தல் தோல்விக்கு ஃபட்னவிஸ் ஒப்புதல்!