இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்தும் அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஜனவரி மூன்றாம் தேதி முதல் தடுப்பூசியும், முன்களப் பணியாளர்கள் மூத்த குடிமக்களுக்கு(60 வயதுக்கு மேற்பட்டோருக்கு) ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படவுள்ளது என அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அதில், 15-18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும்.
இந்த திட்டத்தில் சுமார் ஏழு கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வரும் ஜனவரி மூன்றாம் ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.
அதேபோல், 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10ஆம் தேதி முதல் செலுத்தப்படும். இதில் 2.75 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்கள் உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட இரு பிரிவிலும் அதிகபட்ச பயனாளர்களை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. நாட்டில் இதுவரை 143 கோடியே 18 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இதில் 84 கோடியே 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 59 கோடியே மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். நேற்று(டிச.28) ஒரு நாளில் மட்டும் சுமார் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி