அனைத்து தரப்பு மக்களின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று ரேஷன் பொருள்கள் விநியோகிக்கும் திட்டத்தை நிராகரிப்பதாகக் கூறி முன்னதாக கடிதம் ஒன்றை ஒன்றிய அரசு டெல்லி அரசுக்கு அனுப்பியது.
’பீட்சா வழங்கலாம், ரேஷன் பொருள் வழங்க முடியாதா?’
இந்நிலையில், இந்தத் திட்டத்தை டெல்லி அரசு தற்போது முன்மொழியவில்லை எனத் தெரிவித்துள்ள அம்மாநில துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா, எனினும், ரேஷன் விநியோகம் என்பது மாநிலத்தின் பொறுப்பு என்றும், மக்கள் தங்கள் வீடுகளுக்கு பீட்சா, உடைகள் மற்றும் பிற பொருள்களை வரவழைத்து பெற முடியும்போது, ஏன் ரேஷன் பொருள்களை வீட்டு வாசலுக்கு சென்று வழங்க முடியாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
’வேடிக்கையான கேள்விகளை எழுப்பும் ஒன்றிய அரசு’
மேலும், ஒன்றிய அரசு அக்கடிதத்தில் குறுகிய பாதைகள், பல மாடிக் கட்டடங்களில் வசிக்கும் பயனாளிகளுக்கு ரேஷன் எவ்வாறு இம்முறையில் வழங்கப்படும் என்றும், ரேஷன் டெலிவரி வேன்கள் உடைந்தால் என்ன நடக்கும் என்றும் வேடிக்கையான பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்றும் மனீஷ் சிசோடியா சாடியுள்ளார்.
மாநில அரசுகளுடன் மோதல்போக்கு
மேற்கு வங்கம், மகாராஷ்டிரா அரசுகளுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கை மேற்கோள்காட்டி பேசிய சிசோடியா, 'பிரதமர் ஏன் எப்போதும் சண்டையிடும் மனநிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். கடந்த 75 ஆண்டுகளில் இதுபோன்ற சண்டையிடும் பிரதமரை நாடு பார்த்ததில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
திட்டத்தை நிராகரித்த ஆளுநர்
முன்னதாக வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்குவதற்கான திட்டத்தை ஜூன் மாதத்தில் தொடங்க டெல்லி அரசு திட்டமிட்டது. ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று கூறி திட்டம் தொடர்பான கோப்புகளை அம்மாநில துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் திருப்பி அனுப்பியநிலையில், திட்டம் கைவிடப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
டெல்லி அரசு முன்மொழிந்துள்ள இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், மாநிலத்தின் 72 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இது பயனளிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கண்களை கட்டிக்கொண்டு ’ரூபிக் கியூப்’ - சச்சினை திகைக்க வைத்த மும்பை சிறுவன்!