கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ஃபைஸர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தின் 3ஆம் கட்ட மருத்துவச் சோதனைகள் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது.
இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்தை விநியோகம் குறித்து மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துவருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "அடுத்த ஆண்டின் முதல் 3-4 மாதங்களில்,மக்களுக்கு தடுப்பு மருந்தை வழங்க முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.
மேலும், அடுத்தாண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்குள், சுமார் 25-30 கோடி மக்களுக்கு தடுப்பு மருந்தை வழங்கும் திட்டம் உள்ளது, இதற்காக நாங்கள் தயாராகிறோம்.
கரோனாவுக்கு எதிரான போர் தொடங்கி விரைவில் 11 மாதங்கள் நிறைவடையவுள்ளது. பொதுமக்கள் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்களின் உடல்நலனை பேணுவதில் அது முக்கியம். மாஸ்க்குகளும் சானிடைசர்களும்தான் நம் முக்கிய ஆயுதங்கள்" என்றார்.
தொடர்ந்து நாட்டிலுள்ள கரோனா நிலைமை குறித்துப் பேசிய அவர், "ஜனவரி 2020இல் கரோனாவை கண்டறிய நம்மிடம் ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது 2,165 ஆய்வகங்கள் உள்ளன. தினசரி 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக 14 கோடி மருத்து சோதனைகளை நடத்தியுள்ளோம். இவை அனைத்தும் அரசின் உறுதியையும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நமது அயராத முயற்சியையும் காட்டுகிறது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் நமது நாடு மாஸ்க் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பதில் தன்னிறைவு அடைந்துள்ளது.
இந்தியாவில் தற்போது தினசரி 10 லட்சம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கிறது. நமது ஆராய்ச்சியாளர்கள் தற்போது கரோனா தடுப்பு மருந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதுவும் விரைவில் நல்ல முடிவை தரும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.
இந்தியாவில் தற்போதுவரை 94.31 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4.46 லட்சம் பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். 88.47 லட்சம் பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனர். மேலும், 1.37 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா குறித்து டிசம்பர் 4இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!