டெல்லி : 2022 -2023 நிதி ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 8 புள்ளி 15 சதவீதமாக உயர்த்தி மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது.
முன்னதாக தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 10 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 8 புள்ளி 15 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தொழிலாளர் வைப்பு நிதி வாரியமான இபிஎப்ஒ தெரிவித்து உள்ளது.
டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டத்தில் 2022- 23ஆம் நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதத்தை 8 புள்ளி 15 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
இந்த வட்டி விகிதம் உயர்வின் மூலம் ஏறத்தாழ 7 கோடி பயனர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருங்கால் வைப்பு நிதி வட்டி விகித உயர்வுக்கு மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்து உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக கடந்த 2021- 2022 ஆம் நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி 8 புள்ளி 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதற்கு முன் கடந்த 1977 - 78 ஆம் நிதி ஆண்டில் வட்டி வகிதம் 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத அளவில் வருங்கால் வைப்பு நிதியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சுணக்கம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த நிதி ஆண்டில் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சர்வதேச நிலவரம் மற்றும் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு முறையும் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது. இதற்கு முன் கடந்த 2015 - 2016 நிதி ஆண்டில் அதிகபட்சமாக வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8 புள்ளி 8 சதவீதமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இஸ்ரோவின் அடுத்த திட்டம்.. சிங்கப்பூரின் 7 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி56 ராக்கெட்!