டெல்லி : ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பிராமணப் பத்திரிகை தாக்கல் செய்த மத்திய அரசு, தன் பாலின திருமணம் என்பது நகர்ப்புற உயரடுக்கு பார்வையை கொண்டு இருப்பதால் அது தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள தடையாக இருக்கும் இந்தியத் தண்டனை சட்டப் பிரிவுவின் 377-ஐ நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கைக் கடந்த 2018ஆம் ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், தன்பாலினச்சேர்க்கை குற்றமில்லை எனத் தீர்ப்பளித்தது.
அத்துடன் சட்டப் பிரிவு 377ஐ உச்ச நீதிமன்றம் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. இதனால் நாடு முழுவதும் தன்பாலினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இதையடுத்து ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் தன் பாலின திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் இரண்டாவது பதிலளிக்கும் வகையிலான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் திருமணம் என்ப சமூக சட்டமைப்பை பிரதிபலிப்பது என்றும்; அது இந்திய அரசியலமைப்பின் 246-வது சட்டப்பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சட்டமன்றங்களால் மட்டுமே அதை உருவாக்குவது, அமைப்பது மற்றும் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திருமணத்திற்கான தற்போதைய சட்ட கட்டமைப்பைக் கொண்டு நீதிமன்றங்களால் அதை உருவாக்கவோ, அங்கீகரிக்கவோ முடியாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரே பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பது நகர்ப்புற உயரடுக்கின் பார்வை என மத்திய அரசு தெரிவித்தது.
ஒரே பாலின திருமணங்களை ஆதரிப்பதன் மூலம் ஒரு புதிய சமூகத்தை உருவாக்க உச்ச நீதிமன்றம் முயற்சிக்கக் கூடாது என்றும்; நீதிபதிகள் இந்தப் பணியை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரே பாலின திருமணம் என்பது பிரத்யேகமான பன்முகத்தன்மை கொண்ட அமைப்பு நிலை என்றும்; அந்த திருமணங்களுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட நலன்கள் தீவிரமாக பாதிப்புக்குள்ளாவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
ஒரே பாலின திருமணம் என்பது சமூகம் ஏற்றுக்கொள்ளும் நோக்கத்தை உருவாக்குவதற்கான நகர்ப்புற உயரடுக்கின் கருத்தைக் கொண்டது என மத்திய அரசு தெரிவித்தது. இதுபோன்ற வேறு வகை திருமணங்களை சமூக ரீதியாகவும், மத ரீதியாகவும் ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது குறித்தும் கிராமப்புற மற்றும் நடுத்தர நகர்ப்புற மக்களின் எண்ணங்கள் குறித்தும் கருத்தில் எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஒரு புதிய சமூக நிறுவனத்தை உருவாக்குவதற்கு உரிமை உண்டு என்பதற்காகவோ அல்லது தனி நபர் விருப்பம் என்பதற்காகவோ ஒரே பாலின திருமணங்களுக்கு உரிமை கோர முடியாது என்றும்; இது அடிப்படை உரிமையாகாது என்றும் தெரிவிக்கப்பட்டது. தனி நபரின் விருப்ப உரிமையில் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதற்கான உரிமை இல்லை என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உச்ச நீதிமன்றம் தரப்பில் பதிலளிக்கும் வகையிலான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜெய்ப்பூர் - டெல்லி இரண்டடுக்கு ரயிலில் திடீர் புகை - பயணிகள் பதற்றத்தால் நடுவழியில் ரயில் நிறுத்தம்!