டெல்லி: குஜராத்தில் 2002ஆம் ஆண்டு வெடித்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அப்போது முதலமைச்சராக இருந்த பிரதமர் மோடி கலவரத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில், கலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், பிரதமர் மோடி குற்றமற்றவர் என்று அறிவித்தது.
இந்த கலவரம் தொடர்பாக பிபிசி டூ செய்தி நிறுவனம், இரு பாகங்கள் அடங்கிய இந்தியா: மோடியின் கேள்விகள் என்ற தலைப்பில் ஆவண படத்தை தயாரித்துள்ளது. முதல்பதிப்பு ஜனவரி 17ஆம் தேதி வெளியன நிலையில், 2ஆவது பாகம் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
முதல் பாகத்தில் பிரதமர் மோடிக்கும், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூகத்திற்கும் இடையிலான பிரச்சினை, 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விவரிக்கப்பட்டிருந்தது. இந்த தொடர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக, பிரிட்டன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ராமி ரேஞ்சர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதன்பின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை காட்டுகிறது. இது கண்ணியமற்ற செயல் எனத் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் பாகிஸ்தான் வம்சாவெளி எம்.பி. இம்ரான் உசைன், பிபிசி தொடரின் குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பது, இங்கிலாந்து அரசுக்கு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், "எந்த நாட்டில் மக்கள் துன்புறுத்தப்பட்டாலும், நாம் சகித்துக் கொள்ள மாட்டோம். ஆனால், அந்த ஜென்டில்மேன் பற்றி முன்வைக்கப்படும் அனைத்து கருத்துகளிலும் எனக்கு உடன்பாடு இருப்பதாக கூற முடியாது” என்று பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து யூடியூப் மற்றும் ட்விட்டரில் வெளியான வீடியோக்கள் மற்றும் பதிவுகளை மத்திய அரசு முடக்கியது. பிபிசியின் ஆவணப்படம் இந்திய இறையாண்மை மற்றும் ஒறுமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், வெளிநாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி முடக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தகவல் மற்றும் தொழில்நுட்ப விதிகள் 2021இன் படி அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ட்விட்டர் மற்றும் யூடியூப்களில் வெளியான பிபிசி ஆவணப் படத்தை முடக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி பிபிசி ஆவணப்படத்தின் 2ஆவது பகுதி வெளியாக உள்ள நிலையில், மத்திய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Airport: செயற்கைகோள் செல்போனுடன் வந்த அமெரிக்கர் கைது.. உளவாளியா என விசாரணை..