பக்சர் (பீகார்): மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜகவின் முன்னாள் தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், இந்திய அரசியலில் தனக்கான தனித்துவ இடத்தைத் தக்க வைத்திருக்கும் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்பவர். இவர், 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக சிறை சென்றார்.
அதன் பின்னர் பல்வேறு போராட்டங்களை சந்தித்த இவர், 1996ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி முதல் முறை பிரதமராக பதவி ஏற்றார். இந்தியாவின் 10வது பிரதமராக பொறுப்பேற்ற இவரின் பதவிக்காலம் வெறும் 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் 1998ஆம் ஆண்டு 13 மாதங்கள் பிரதமராக பதவி வகித்தார்.
அதையடுத்து, 1999ஆம் ஆண்டு மாநிலக் கட்சிகளுடன் கைகோர்த்த வாஜ்பாய், தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்து வெற்றியை தன்வசமாக்கி 5 ஆண்டுகள் முழுமையாக பிரதமர் பதவியை அலங்கரித்தார். இவர் பிரதமராக இருந்த காலத்தில் தான், இமயம் முதல் குமரிவரை இணைப்பை ஏற்படுத்தியுள்ள தங்க நாற்கரச் சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக இந்தியா அளப்பறிய வளர்ச்சியைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து, பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி, உலக நாடுகள் அனைத்தையும் இந்தியாவை திரும்பிப் பார்க்கும்படி செய்தார். சுதந்திரப் போராட்டத் தியாகி, வெளியுறவுத்துறை அமைச்சர், பிரதமர் எனப் பல பதவிகளை வகித்த இவர், அரசியலில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார். இவர் வயது மூப்பின் காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு மறைந்தார்.
அரசியலில் கறைபடியாத கையாகத் திகழ்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், எளிமையின் மறு உருவமாகத் திகழ்ந்தவர். இதன் காரணமாகவே, தனது அரசியல் பயணத்திலும், மக்கள் மனதிலும் தற்போது வரை நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். இவர் அரசியலில் காட்டிய ஈடுபாட்டை, தனது சொந்த வாழ்கையிலும் குறைவின்றி காட்டிய தலைவர் ஆவார்.
எளிமைவாதியான இவர், மக்களுடன் நெருங்கிப் பழகும் விதமும், சாதரண மனிதரைப் போல வாழ்ந்த காலங்களும் பீகார் மக்கள் மத்தியில் இன்னும் நினைவலைகளாகவே உள்ளது. பீகாரில் உள்ள பக்சர் பகுதிக்கும், வாஜ்பாய்க்கும் இடையே நெருக்கமான மற்றும் அழியாத பிணைப்பு உள்ளது. ஏனெனில் அவர், அங்குள்ள உள்ளூர் உணவு வகைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பீகாரின் லிட்டி சோகா மற்றும் பக்ஸரின் பப்டி ஆகிய இரண்டு உணவு வகைகளும் இவருக்கு மிகவும் பிடித்தமான உணவாகும்.
இதுகுறித்து பக்ஸரில் உள்ள சிவில் லைனில் வசிக்கும் வினோத் உபாத்யாய் கூறுகையில், “1968ஆம் ஆண்டு எனது தந்தை பக்ஸரில் அவரின் ரயில் பயணத்தின் போது, அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பால் கொடுத்துள்ளார். அதன் பின்னர், 1974ஆம் ஆண்டில், அடல் பிஹாரி வாஜ்பாய் எங்கள் வீட்டிற்கு வருகை தந்திருந்தார். அப்போது நாங்கள் அளித்த விருந்தில், அவருக்கு லிட்டி சோகா மற்றும் பப்டி மிகவும் பிடித்திருந்ததை அறிந்தோம். அதில் உள்ளூர் உணவின் மீதான அவரின் ஈர்ப்பை எங்களால் அறிய முடிந்தது” என பகிர்ந்தார்.
இதையடுத்து, பக்ஸரில் உள்ள பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் மாதுரி குன்வார் கூறுகையில், “அடல் ஜி உள்ளூர் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் தலையிட்டு, அவர்களுக்கு நியாயம் வாங்கிக் கொடுப்பதில் மிகுந்த அக்கறை காட்டும் மனிதர். மக்களின் பிரச்னைகளுக்கு களத்தில் இறங்கி தீர்வு காண்பதில் முழு ஈடுபாட்டுடன் இருப்பார்” என உள்ளூர் நலனில் வாஜ்பாயின் தனிப்பட்ட ஈடுபாட்டைப் பற்றிக் கூறினார்.
மேலும், இவர் பிரதமராக பதவி ஏற்ற பின்னரும் தனது எளிமைத் தன்மையில் கொஞ்சம் கூட மாறுபாடு இன்றி வாழ்ந்துள்ளார். அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்தாலும், தனது விருப்பங்கள் மற்றும் எண்ணங்களில் எளிமையைக் கடைபிடித்து வாழ்ந்த தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவர். அந்த வகையில், எளிமைவாதி அடல் பிஹாரி வாஜ்பாய்யின் 99வது பிறந்த நாள் இன்று (டிச.25) கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இவரின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து, மத்திய மந்திரிகள், நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: "மரியாதை கொடுத்து மரியாதை பெற வேண்டும்" - இந்தி குறித்த தயாநிதி மாறனின் வைரல் வீடியோவுக்கு தேஜஸ்வி யாதவ் கண்டனம்!