டெல்லி: 2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை, ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீடியோகான் குழுமத்துக்கு விதிகளை மீறி 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கினார். இந்த கடனில் குறிப்பிட்ட தொகை சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்கு சென்றதாக கூறப்படுகிறது. வீடியோகான் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கடன் வராக் கடனாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஐசிஐசிஐ வங்கி கடந்த 2018ஆம் ஆண்டு சந்தா கோச்சாரை பணிநீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த விவகாரத்தில், சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சாரின் 78 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதனிடையே கடந்த 24ஆம் தேதி, சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் இருவரையும் சிபிஐ கைது செய்தது. இருவரும் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அவர்களை காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத்தை சிபிஐ கைது செய்துள்ளது.
இதையும் படிங்க: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெலங்கானா, ஆந்திராவுக்கு சுற்றுப்பயணம்