பெங்களூரு: டெல்லியில் கடந்த 11 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் 22வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் கர்நாடக அரசு தரப்பிலான அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தற்போது, 10 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு தமிழகத்திற்குத் திறந்துவிட்டு வருகிறது.
இதனை அடுத்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காவிரி பிரச்சினையில் கோர்ட்டு, சட்டம், அரசியல் சாசனத்தை நாம் மதிக்க வேண்டும். இதற்கு முன்பு இருந்த அரசுகளும் கோர்ட்டு உத்தரவை மதித்து தண்ணீரை திறந்து விட்டுள்ளன. ஆனால் நமது விவசாயிகளின் நலனை காப்பது எங்கள் மீது உள்ள மிகப்பெரிய பொறுப்பு. தண்ணீர் திறந்துவிட்டுள்ளதை கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இது சகஜம் தான். இத்தகைய நேரத்தில் அரசு சமநிலையில் செயல்பட வேண்டியுள்ளது. கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கவில்லை. கோர்ட்டு உத்தரவை மதித்து தண்ணீர் திறந்துள்ளோம். அதேபோல் கர்நாடக விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
மழை குறைவாக பெய்துள்ளதால் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கேட்டுள்ளோம். இதற்கு முன்பு இத்தகைய நெருக்கடியான நேரத்தில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் எவ்வளவு நீரை திறந்துவிட்டது என்பது குறித்த புள்ளி விவரங்களை எங்களால் வழங்க முடியும்.
ஆனால் இதில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. காவிரி, மகதாயி, கிருஷ்ணா விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளோம். மத்தியில் உறுதியான அரசு இருந்தும், மகதாயி, கிருஷ்ணா நதி நீர் விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை. இது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீரைக் கர்நாடகா மாநிலம் திறந்து விட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ஆகஸ்டு மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களுக்கு தேவையான 24 ஆயிரம் கனஅடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அதேபோல செப்டம்பர் மாதம் திறந்துவிட வேண்டிய 36.76 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறப்பதை உறுதிசெய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்கு எஞ்சியிருக்கும் காலத்துக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதிசெய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி முறையிட்டார். முறையீட்டு பட்டியலில் இல்லாததால், முறைப்படி பட்டியலில் இடம்பெறச் செய்து திங்கட்கிழமை மீண்டும் முறையிட தமிழ்நாடு அரசை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாலை வசதி இல்லாததால் பறிபோன மருத்துவர் கனவு... கண் கலங்கும் பழங்குடியின மாணவி!