ஹைதராபாத்: தெலங்கானா காங்கிரஸ் கட்சித் தலைவர் ரெவந்த் ரெட்டி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் காவல் நிலையத்தில் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா மீது நேற்று (பிப். 15) புகார் ஒன்றை அளித்தனர்.
அதில், "பாஜக அரசு 2016ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியான உரியில் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டதற்கு ஆதாரம் கேட்டு ராகுல் காந்தி பேசியிருந்தார்.
700 இடத்தில் புகார்
இதற்கு, அசாம் முதலமைச்சர் ஹிமந்தா உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அங்கு பரப்புரையில் ஈடுபட்டபோது, ராகுல் காந்தி கேள்விக்கு பதிலளிக்காமல், அவரின் பிறப்பு குறித்து அவதூறாக பொதுவெளியில் பேசியுள்ளார். எனவே, ஹிமந்தா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானாவில் 700 காவல் நிலையங்களில் காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளித்துள்ள நிலையில், பல இடங்களில் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
ஹிமந்தா சர்ச்சை பேச்சு
இந்நிலையில், ராகுல் காந்தி குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்தா வேண்டுமென்றே அவதூறு பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், காங்கிரஸின் புகார் அடிப்படையில் ஜூப்ளி ஹில்ஸ் காவல் துறையினர் அவர் மீது ஐபிசி 505, 505 (2) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரகாண்டில் பரப்புரையின் போது ஹிமந்தா, "சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து கேள்வி எழுப்பும் ராகுல் காந்தியை நோக்கி, நாங்கள் என்றாவது அவர் ராஜீவ் காந்தியின் மகனா என கேள்வியெழுப்பி உள்ளோமா" என சர்ச்சையாக பேசியது குறிப்பிடத்தக்கது.
ஐந்து மாநில தேர்தல்
ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கோவா, உத்தரகாண்ட ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக கடந்த பிப். 14ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தன. பஞ்சாப்பில் வரும் பிப். 20ஆம் தேதி ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் பிப். 27, மார்ச் 3 என இரு கட்டமாக வாக்குபதிவு நடைபெறுகிறது.
உத்தரப் பிரேதசத்தில் மொத்தம் ஏழு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பிப்.10, 14 என இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது என்பது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழப்பு