ஹவுரா: மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் உள்ள பஞ்ச்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (ஜூலை 30)இரவு காவல் துறையினரின் பரிசோதனை மையத்தில் சோதனைக்காக கார் ஒன்று நிறுத்தப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. அந்த காரை பரிசோதித்தபோது அக்காரில் அதிக பணக்கட்டுக்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் அக்காரில் பயணித்தவர்கள் குறித்து விசாரணையில் ஜார்க்கண்டைச்சேர்ந்த 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல் அலுவலர் பங்காலியா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இந்த வழியில் அதிகப்பணம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் இந்த காரை பரிசோதித்தோம். இதில் மூன்று ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்கள் பயணித்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது' எனக்கூறினார்.
மேலும் காரில் மொத்தம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை துல்லியமாக தீர்மானிக்கப் பணம் எண்ணும் இயந்திரத்திற்கு ஏற்பாடு செய்து வருவதாக கூறினார். இதனையடுத்து அந்த காரில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப் மற்றும் நமன் பிக்சல் ஆகியோர் பயணித்துள்ளனர். அந்த எம்.எல்.ஏக்களுக்கும், அக்காரில் இருந்த பணத்திற்கும் என்ன தொடர்பு என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் மாநில பாஜக பொதுச்செயலாளர் ஆதித்யா சாஹு அவரது ட்விட்டரில் "அவர்களது அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஊழல் அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பும், ஜார்க்கண்ட்-அலுவலர்களின் வீடுகளில் அதிக அளவு பணம் பிடிபட்டது.
அவர்கள் பொதுமக்கள் உழைத்து சம்பாதித்த வருமானத்தை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். காவல்துறை அவர்களைப் பிடித்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் கூறுகையில், ‘ ஜார்க்கண்டில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை நடத்தப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. இதே போன்று அனைத்து மாநிலத்திலும் இந்த சோதனையை நடத்த வேண்டும்’ எனத் தேரிவித்துள்ளார்.
இடைநீக்கம் செய்த காங்கிரஸ்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த மூன்று எம்.எல்.ஏக்களையும் தற்போது இடை நீக்கம் செய்துள்ளார். இது குறித்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, ‘ மூன்று எம்எல்ஏக்களையும் சோனியா காந்தி சஸ்பெண்ட் செய்துள்ளார். இது மற்ற எம்எல்ஏக்கள் மீது பொதுமக்களின் நம்பிக்கையைக் காக்கும் செய்தியாகும்” என்று தெரிவித்தார்.
மேலும் "காங்கிரஸுடன் தொடர்ந்து இருப்பவர்களுக்குத் தகுந்த வெகுமதி வழங்கப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க:இறந்தவர்களுக்குத்திருமணம் செய்து வைக்கும் விநோதச்சடங்கு - துளுபேசும் மக்களின் நம்பிக்கை!