மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இது தொடர்பாக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையிலான ஒரு குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க முயன்றது. அப்போது, அனுமதி மறுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று (நவ. 4) டெல்லி ஜந்தர் மந்தரில் அமரீந்தர் சிங் தலைமையில், பஞ்சாபிலிருந்து அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் தர்ணா நடத்தினர்.
முன்னதாக ராஜ்காட் பகுதிக்குச் செல்ல முயன்றபோது, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திக்கொள்ளும்படி காவல் துறையினர் ஆலோசனை வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஜந்தர் மந்தர் பகுதியில் பஞ்சாப் எம்எல்ஏக்கள் திரண்டனர். பின்னர் அங்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அமரீந்தர் சிங், “மத்திய அரசால் அண்மையில் இயற்றபட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், தனக்கும் தனது குடும்பத்திற்கும் அமலாக்கத்துறை மற்றும் வருமானத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், இந்த நோட்டீஸ் எதற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது கேள்வி எழுகிறது” என்றார்.
இதையும் படிங்க... வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்!