ஒட்டவா : பயங்கரவாதத்திற்கு எதிராக கனடா தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அது தொடரும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து உள்ளார். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் பயங்கரவாதிகள் மீது அரசு மென்மையாக நடந்து கொள்வதாக நம்புவது தவறு என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
அண்மைக் காலமாக கனடாவில் காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படுவதாக இந்திய கூறி இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் கனடா உறுதியுடன் இருப்பதாகவும் நாட்டில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் பயங்கரவாதிகள் மீது அரசு மென்மையாக நடந்து கொள்வதாக கூறப்படும் கருத்தை நிராகரிப்பதாகவும் கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், கனடா எப்போதும் வன்முறை மற்றும் வன்முறை அச்சுறுத்தல்கள் மீது தீவிரமான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அது தொடரும் என்றும் கூறினார்.
பன்முகத்தன்மை மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு கனடா முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அதேநேரம் வன்முறை மற்றும் தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்ப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவுன் அவர் கூறினார். கனடா மிகவும் மாறுபட்ட நாடு என்றும் கருத்து சுதந்திரம் என்பது தங்களிடம் இருப்பதாகவும் கூறிய ஜஸ்டின் அதேநேரம் வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக அதன் அனைத்து வடிவங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
ஜூலை 8 ஆம் தேதி கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு வெளியே காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் கனடா அதிகாரிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் வன்முறை தொடர்பான போஸ்டர்களை ஒட்டிய காலிஸ்தான் அமைப்பினருக்கு கண்டனம் தெரிவிப்பதாவும் கனடா தெரிவித்தது.
இதையும் படிங்க : மணிப்பூர் கலவரம் : பள்ளி முன் பெண் சுட்டுக் கொலை! தொடரும் துயரச் சம்பவங்கள்!