ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் இந்தோ-திபெத்திய எல்லை காவலர்படை வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 வீரர்கள் உயிரிழந்தனர்.
31 வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து பஹல்காம் போலீசார் தரப்பில், இந்த விபத்து சந்தன்வாரி மற்றும் பஹல்காம் இடையே உள்ள பள்ளத்தாக்கில் நிகழ்ந்துள்ளது. இந்த வீரர்கள் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் இருந்து திரும்பியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அனந்த்நாக்கில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்பு என்னை சோகத்தில் ஆழ்த்துகிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கல்கள் என ட்வீட் செய்துள்ளார். அதேபோல உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் சின்ஹா தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காஷ்மீரில் இருவேறு இடங்களில் தாக்குதல்... போலீஸ் உள்ளிட்ட 2 பேர் காயம்