பவுத்தர்களுடைய முக்கிய நாளான புத்த பூர்ணிமா, இன்று(மே.26) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், கம்போடியா, திபெத், லாவோஸ் போன்ற நாடுகளில் புத்த பூர்ணிமா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளின் மூன்று சிறப்புகள்:
1. புத்தர் பிறந்த தினம்
2. புத்தர் ஞானம் அடைந்த தினம்
3. புத்தர் பரிநிப்பாணம் அடைந்த தினம்
இன்றைய நேபாள நாட்டின் கபிலவஸ்து நகரத்தில், அரசக் குடும்பத்தில் கி.மு.623ஆம் ஆண்டு பிறந்தார் சித்தார்த கெளதமர். பிறக்கும் போதே அவரது உடலில் முப்பத்துயிரண்டு புனிதமான பிறவி அடையாளங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிறு வயது முதலே அடுத்தவர் படும் துன்பத்தைக் கண்டு வாடும் இயல்பு சித்தார்தருக்கு இருந்தது. அவர் பதினாறு வயதில் யசோதரா என்ற பெண்ணை மணமுடித்துக் கொண்டார். அவர்களுக்கு ராகுலா என்றொரு மகனும் பிறந்தான்.
இந்நிலையில், ஆடம்பர வாழ்க்கையை வெறுக்கத் தொடங்கிய அவர், தனது 29ஆம் வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார். அப்போது, இதுவரை அவரது வாழ்க்கையில் கண்டிராத துன்பங்களை, மக்கள் சந்தித்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதற்கான காரணங்களைத் தேடி அலைந்தார். பல்வேறு ஆசிரியர்களிடம் தன் கேள்விக்கான விடையை தேடி அலைந்த சித்தார்த்தர், இறுதியில் கயாவில் போதி மரத்தடியில் ஆறு ஆண்டுக்காலம் தவம் இருந்ததன் பலனாக, தனது பிறந்த அதே பவுர்ணமி நாளில் ஞானம் அடைந்து, தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார். அன்று முதல் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனது முப்பத்து ஆறாவது வயதிலிருந்து தான் கண்டடைந்த ஞானத்தை மக்களுக்கு போதித்து வந்தார். தனது 80 வயது வரை மக்களுக்கு போதனை செய்து வந்த புத்தர் தான் ஞானமடைந்த அதே பவுர்ணமி நாளில் பரிநிப்பாணம் அடைந்தார்.
புத்தரின் நான்கு முக்கிய போதனைகள்:
- துன்பத்தை மக்கள் எவராலும் தடுக்க முடியாது.
- ஆசையே மக்களின் துக்கத்திற்குக் காரணம்.
- துன்பத்தைத் தடுக்க ஆசையைத் துறப்பதே ஒரே வழி.
- நல்லெண்ணம், நன்மொழி, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நற்தியானம் இவையெல்லாம் துக்கத்தைப் போக்கும் வழிமுறைகள்.