வாரணாசி: 90's கிட்ஸ்-களுக்கு திருமணம் நடப்பது குதிரைக் கொம்பாக மாறிவிட்ட காலம் இது. 1990-களில் பிறந்தவர்களுக்கு திருமணம் நடப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை ஜாலியாக விவரிக்கும் மீம்ஸ்கள், சமூக வலைதளங்களில் குவிந்திருப்பதை பார்த்திருப்போம். 2k கிட்ஸ்களுக்கு எளிதாக திருமணம் நடந்தாலும், தங்களுக்கு திருமணம் நடப்பதில்லை என 90களில் பிறந்தவர்கள் குமுறுவது போன்ற மீம்ஸ்கள், இணையத்தில் உலா வருகின்றன.
இந்நிலையில், பல சிரமங்களுக்கு மத்தியில் பெற்றோர் ஏற்பாடு செய்த தனது திருமணம் நின்று போக, காரணமாக இருந்திருக்கிறார் 90's கிட்ஸ் இளைஞர் ஒருவர். உத்தரப்பிரதேச மாநிலம், சவுபிபூர் பகுதியைச் சேர்ந்தவர், பாரத். இவருக்கும் ஜான்சாவைச் சேர்ந்த ஜெய்மாலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹருவா பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
துவார் பூஜை முடிந்த பிறகு மணமகன் பாரத், மணமேடையில் அமர வைக்கப்பட்டார். அப்போது அவரது நண்பர்கள் மது அருந்தியபடி வந்திருந்தனர். மது போதையில் மண மேடையில் ஏறி நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் மணமகள் ஜெய்மால் மண மேடைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவரது தோழிகளை, மணமகன் பாரத்தின் நண்பர்கள் கேலி செய்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து வைத்தனர்.
பின்னர் மணமகள் ஜெய்மாலின் கழுத்தில், பாரத் மாலையிட முயன்றார். அப்போது அவர் மது குடித்ததை அறிந்த மணமகள், தடுத்து நிறுத்தினார். மணமேடையில் இருந்து கோபத்தில் வேக வேகமாக கீழே இறங்கிய அவர், தனது அறைக்குச் சென்றுவிட்டார். திருமணத்துக்கு வந்தவர்கள் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் குழம்பினர். ஜெய்மாலின் குடும்பத்தினர் அவரிடம் சென்று கேட்டபோது, பாரத் மது அருந்தியிருப்பதால் அவரைத் திருமணம் செய்ய விருப்பமில்லை என்று கூறியுள்ளார். இதையறிந்த பாரத்தின் தந்தையும், அவரது சகோதரரும் மணமகனை மண்டபத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்று காரில் அமர வைத்தனர்.
மணமகன் பாரத்தின் குடும்பத்தினர் பலமுறை கெஞ்சி கேட்டும், திருமணம் செய்ய ஜெய்மால் மறுத்துவிட்டார். அதற்குள் இந்த விவகாரம் போலீசுக்கு சென்றது. தகவலறிந்து வந்த போலீசார் இரு குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவில் தொடங்கிய பேச்சுவார்த்தை, அதிகாலை 4.30 மணி வரை நீடித்தது. ஆனால், எந்த சமரசமும் எட்டப்படவில்லை. திருமணம் வேண்டாம் என்ற தனது நிலைப்பாட்டில் மணமகள் ஜெய்மால் உறுதியாக இருந்தார். கடைசியாக திருமணம் நின்று போனது.
முன்னதாக, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு பாரத்தும், ஜெய்மாலும் தொலைபேசியில் பேசி வந்தனர். ஒருநாள் குடிபோதையில் பேசிய பாரத், ஜெய்மாலை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். அப்போதே இந்த மாப்பிள்ளை வேண்டாம் என மறுத்துள்ளார், ஜெய்மால். ஆனாலும், அவரை சமாதானம் செய்த பாரத், திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. கடைசியில் மது அருந்திவிட்டு தனது திருமணம் நிற்க அவரே காரணமாக இருந்துவிட்டார்... பார்த்து சூதனமாக நடந்துக்கோங்க 90's கிட்ஸ்!