திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் ஓராண்டாக வெற்றிகரமாக செயல்பட்டுவருவதால், மேலும் 2 மருத்துவமனைகளில் வங்கிகள் அமைக்க மாநில சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, கோழிக்கோட்டில் உள்ள தாய்ப்பால் வங்கியை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று ஆய்வு செய்தார். இந்த வங்கி பல தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் உதவியாக உள்ளதாக அங்கு வரும் தாய்மார்கள் அவரிடம் தெரிவித்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த வீணா ஜார்ஜ், "இந்த அதிநவீன தாய்ப்பால் வங்கியின் நோக்கம், தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பதும், குழந்தைகள் மற்றும் பால் சுரக்காத தாய்மார்களுக்கு ஆதரவு வழங்குவதுமாகும்.
இந்த கோழிக்கோடு தாய்பால் வங்கி ஒரு வருடத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. இதுவரை 1,813 குழந்தைகளுக்கு 1,397 தாய்மார்கள் தாய்ப்பால் வழங்கி உதவியுள்ளனர். இதுவரை 1,26,225 மில்லி தாய் பால் சேகரிக்கப்பட்டு, அதில் 1,16,315 மில்லி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டுவருவதால், இதேபோல திருவனந்தபுரம் மற்றும் திருச்சூரில் உள்ள மருத்துவமனைகளில் வங்கிகள் விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தேசிய தளவாடக் கொள்கை நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும்"