மோகா (பஞ்சாப்) : 2022 பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் சோனு சூட்டின் (Sonu Sood) இளைய சகோதரி மாளவிகா (Malvika) போட்டியிடுகிறார். எனினும் இவர் எந்தக் கட்சி சார்பாக போட்டியிடுகிறார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய சோனு சூட், மக்களுக்கு சேவை செய்ய எனது சகோதரி அரசியல் ஈடுபடவுள்ளார், அவருக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பில் உள்ளார். அங்கு உள்கட்சி பிரச்சினையால் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் பாஜக அல்லது சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு (2022) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸூம், இழந்த ஆட்சியை மீட்க சிரோமணி அகாலிதளம் இடையேயும் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் கேப்டன் அமரீந்தர் சிங்கின் புதுவரவு காங்கிரஸிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கரோனா பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகர் சோனு சூட் பல்வேறு மனிதாபிமான உதவிகளை செய்தார். சோனு சூட்டின் சகோதரி மாளவிகா அரசியலில் குதிக்கும் நிலையில், முன்னதாக நடிகர் சோனு சூட் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசினார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லி முதலமைச்சரை சந்தித்த சோனு சூட் - தேர்தல் காரணமா?