நேபாளம்: நேபாளத்தில் ’தாரா ஏர்’ என்ற சிறிய ரக பயணிகள் விமானம் கடந்த 29-ம் தேதி விபத்துக்குள்ளானது. அதில், 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள் உள்ளிட்ட 22 பேர் உயிரிழந்தனர். கடந்த இரண்டு நாட்களாக ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று காலை(மே 31) உயிரிழந்த அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
சடலங்கள் அனைத்தும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டு கொண்டுவரப்பட்டதாகவும், அவை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் பொது மேலாளர் பிரேம் நாத் தாகூர் தெரிவித்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாகவும், கறுப்புப் பெட்டியில் பதிவான உரையாடல்களை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர். மோசமான வானிலை காரணமாகவே விபத்து ஏற்பட்டது என்று கூறப்படும் நிலையில், கறுப்புப் பெட்டியை ஆய்வு செய்தால் உண்மையான காரணம் தெரியவரும் என்றும் நேபாள அலுவலர்கள் குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க: ஐந்து ஆண்டுகள் ரயில்வேயிடம் போராடி ரூ.35ஐ திரும்பப் பெற்ற பொறியாளர்!