அலகாபாத்: பிரயாக்ராஜில் கங்கைக் கரையில் கிடந்த சடலங்களை அப்புறப்படுத்த மாநில அலுவலர்களுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடிசெய்தது.
தலைமை நீதிபதி சஞ்சய் யாதவ், நீதிபதி பிரகாஷ் பாடியா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுதாரரின் வாதத்தை நிராகரித்தது. மேலும் தகனம்செய்வது, உடல்களைக் கண்ணியமாக அப்புறப்படுத்துவது அரசின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டது.
நீதிமன்றம் மனுதாரரின் நேர்மையான குற்றச்சாட்டுகளைக் கேள்வி எழுப்பியதுடன், இறந்த உடல்களை அடையாளம் கண்டுகொள்வதன் மூலமோ அல்லது இறுதிச்சடங்கை நடத்துவதன் மூலமோ மனுதாரர் தனிப்பட்ட முறையில் பங்களிப்பு ஆற்றினாரா என்பதை அறிய விரும்பியது.
"இந்த விவகாரத்தில் உங்களின் தனிப்பட்ட பங்களிப்பு என்ன? நீங்கள் தோண்டியெடுத்து உடல்களைத் தகனம்செய்தால் எங்களிடம் கூறுங்கள்" என்று நீதிபதிகள் கேட்டனர்.
முறையாக ஆய்வுசெய்யாமல் பொதுநல வழக்கு என்ற பெயரில் அணுகிய மனுதாரர் மீது நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் மனுவை தள்ளுபடிசெய்தது. இந்த மனு பிரன்வேஷ் என்ற வழக்கறிஞரால் தொடுக்கப்பட்டது.
மனுதாரரின் வாதத்திற்கு, "அவர் இந்த இடங்களைத் தனிப்பட்ட முறையில் பார்வையிட்டார், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது" என்று நீதிமன்றம் கூறியது.
"நீங்கள் சில ஆய்வுகளை மேற்கொண்டு திரும்பப் பெறுவது நல்லது, நாங்கள் அத்தகைய மனுக்களை ஊக்கப்படுத்துவதில்லை. நீங்கள் களத்தின் உண்மையான நிலவரத்தைச் சரியாக ஆய்வுசெய்யவில்லை" எனவும் குறிப்பிட்டது.
துணை பிரமாணப் பத்திரத்தில், 'உரிமை கோரப்படாத இறந்த உடல்கள்' விஷயத்தை ஆராயுமாறு மாநில அலுவலர்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய ஒரு ஆலோசனையை பிரன்வேஷ் சுட்டிக்காட்டியிருந்தார்.
"கங்கை ஆற்றங்கரைக்கு அருகில் வாழும் பல்வேறு சமூகங்களிடையே உள்ள சடங்குகள், பழக்கவழக்கங்கள் குறித்து மனுதாரர் எந்த ஆய்வும் செய்யவில்லை என்பது எங்கள் கருத்து.
நாங்கள் அவரது மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்கிறோம். சில ஆய்வுப் பணிகளுக்குப் பின் மீண்டும் அவர் மனு தாக்கல்செய்யலாம்" என்று நீதிமன்றம் கூறியது.
நீதிமன்றம் தனது சுருக்கமான கருத்தில், இதுபோன்ற மனுக்களை அனுமதிக்க மாட்டோம் என்று தெளிவுபடுத்தியது.