சோலன்: ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் நகரில் உள்ள தோடோ மைதானத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "முந்தைய ஆட்சிகளில் நாடு கொள்கை ரீதியாக பின்தங்கி இருந்தது. ஆனால், நாங்கள் வளர்ச்சிக்கான எந்த வாய்ப்பையும் விட்டுவைக்காமல் பயன்படுத்தினோம். அதன் காரணமாகவே 2019ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் எங்களை மீண்டும் ஆசிர்வதித்தனர். உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்திலும் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறுவதால் ஏற்படும் நிலையற்ற தன்மையையை சில சுயநல சக்திகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தன. தங்களை மிகவும் நேர்மையானவர்கள் என்று கூறும் அவர்கள் உண்மையில் ஊழல்வாதிகள்.
ஹிமாச்சலில் இதுபோன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால், அவர்கள் தங்கள் சுயலாபங்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள், மக்களின் தேவைகளில் கவனம் செலுத்த மாட்டார்கள். இதுபோன்ற சுயநல கும்பல்களை ஹிமாச்சல பிரதேச மக்கள் தவிர்க்க வேண்டும். பாஜக அரசு தொடங்கியுள்ள வளர்ச்சி தொடர வேண்டும். அதனால், பாஜகவுக்கு வாக்களிப்பது அவசியம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: "பாஜகவின் வஞ்சகத்திலிருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம்" - ராகுல்காந்தி!