புது டெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ‘குஜராத்தின் கசாப்புகடைக்காரர்’ எனக் கூறிய பாகிஸ்தான் அமைச்சர் பிலாவால் புட்டோ சர்தாரியை எதிர்த்து நாடெங்கும் பாஜகவினர் போராட்டம் நடத்தவுள்ளனர். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவால் புட்டோ சர்தாரி நியூ யார்க் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கூறிய கருத்து தற்போது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், தற்போது அனைத்து மாநிலங்களிலும் பாஜகவினர் போராட்டம் நடத்தவுள்ளனர்.
இந்நிலையில், நேற்று(டிச.16) டெல்லியிலுள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் வாசலில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பாஜகவினர், “இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கை உலகெங்கும் பாராட்டப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அதை விட சிறிய நாடுகளை விட பின்னடைந்துள்ளது. ரஸ்யா - உக்ரைன் போரில் சிக்கிய பாகிஸ்தான் மாணவர்களை கூட மீட்பதற்கு நமது பிரதமர் எப்படி உதவினார் என்பது உலகறியும். இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சரின் இத்தகைய பேச்சு மிகவும் கண்டனத்திற்குரியது” என்றனர்.
நியூயார்க் செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் அமைச்சர் சர்தாரி பேசுகையில், “ஒசாமா பின் லேடன் இறந்துவிட்டார். ஆனால் குஜராத்தின் கசாப்புகாரர் இன்னும் வாழ்கிறார். அவர்தான் இந்தியாவின் பிரதமர். அவர் பிரதமராகும் முன்னரே இந்தியாவிற்குள் நுழைய தடைசெய்யப்பட்டவர். அப்படிபட்டவர் தான் தற்போது இந்தியாவின் பிரதமர்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: ஹசிமரா விமான தளத்திற்கு விரைந்த ரஃபேல்... தண்ணீர் பிய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு..