குஜராத்தின் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர் ஆகிய ஆறு மாநகராட்சிளில் கடந்த 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணி முதல் நடைபெற்றுவந்தது. ஆரம்பம் முதலே ஆறு மாநகராட்சியிலும் முன்னிலை வகித்துவந்த பாஜக, அனைத்து மாநகராட்சியையும் கைப்பற்றியுள்ளது.
கோட்டையை தக்கவைத்த பாஜக
அகமதாபாத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 192 இடங்களில் 159 இடங்களை பாஜக கைப்பற்றியது. அதேபோல், சூரத்தில் உள்ள 120 இடங்களில் 93 இடங்களையும், வதோதராவில் உள்ள 76 இடங்களில் 69 இடங்களையும், ராஜ்கோட்டில் உள்ள 72 இடங்களில் 68 இடங்களையும், ஜாம்நகரில் உள்ள 64 இடங்களில் 50 இடங்களையும், பாவ்நகரில் உள்ள 52 இடங்களில் 44 இடங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து மொத்தமுள்ள 576 இடங்களில் 483 இடங்களை வென்ற பாஜக ஆறு மாநகரட்சிகளையும் தன்வசப்படுத்தியது.
காங்கிரஸ் படுதோல்லி
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அனைத்து மாநகராட்சியிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள 192 இடங்களில் 25 இடங்களையும், வதோதராவில் உள்ள 76 இடங்களில் 7 இடங்களையும், ராஜ்கோட்டில் உள்ள 72 இடங்களில் 4 இடங்களையும், ஜாம்நகரில் உள்ள 64 இடங்களில் 11 இடங்களையும், பாவ்நகரில் உள்ள 52 இடங்களில் 8 இடங்களையும் மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக, சூரத்தில் உள்ள 120 இடங்களில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றிபெற முடியவில்லை.
குஜராத் காங்கிரசின் தலைவராக ஹார்திக் படேல் நியமிக்கப்பட்டப் பின் அக்கட்சி சந்திக்கும் முதல் முக்கியத் தேர்தல் இதுபோன்ற படுதோல்வியைச் சந்தித்துள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
என்ட்ரி கொடுத்த ஆம் ஆத்மி
குஜாரத்தில் மாற்று சக்தியாக தன்னை முன்னிலைப் படுத்திக்கொண்டு இந்தத் தேர்தலில் களம்கண்ட ஆம் ஆத்மி நல்ல அடித்தளத்தைப் பெற்றுள்ளது. ஆறு மாநகராட்சிகளில் சூரத் தவிர வேறெங்கும் ஆம் ஆத்மி வெற்றிபெறவில்லை. 120 இடங்களைக் கொண்ட சூரத்தில் 27 இடங்களை கைப்பற்றி அங்கு பாஜகவுக்கு அடுத்த இடத்தை ஆம் ஆத்மி பெற்றுள்ளது.
இதே சூரத்தில்தான் காங்கிரஸ் ஒரு இடத்தைக் கூட கைப்பற்றவில்லை என்பது கவனிக்கத்தக்கது. டெல்லி, பஞ்சாப், ஹரியானா, கோவா ஆகிய மாநிலங்களுக்குப் பின் குஜாரத்திலும் தனது தடத்தை பதிக்க தீவிர முன்னெடுப்புகளை ஆம் ஆத்மி மேற்கொண்டுவருகிறது. சூரத்தில் ஆம் ஆத்மியின் என்ட்ரி அதற்கு ஊக்கமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
அசாதுதீன் ஒவைசியின் ஏ.எம்.ஐ.எம். கட்சியும் இந்தத் தேர்தலில் தனித்து களம் கண்டது. ஒவைசியே குஜராத் சென்று தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட நிலையில், அகமதாபாத் மாநகராட்சியில் உள்ள ஏழு இடங்களை மட்டுமே அக்கட்சியால் கைப்பற்ற முடிந்தது. அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹைதராபாத் தேர்தல்: சரிவு கண்ட கே.சி.ஆர்; பலம் கூட்டிய பாஜக; தக்கவைத்த ஓவைசி!