டெல்லி: பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் கோட்டை முன்பு இருந்த சீக்கிய மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங் சிலையை, தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏலபாயக் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தகர்த்தனர். இதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலை தகர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து பாஜக இளைஞர் அமைப்பான பாஜக யுவ மோர்ச்சாவின் (BJYM) நிர்வாகிகள், பாகிஸ்தான் தூதரகம் முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, சர்தார் ஆர்.பி.சிங், ராஜீவ் பப்பர், அசோக் கோயல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தான் தூதரகத்தை நோக்கி பேரணியாக சென்றவர்களை அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி, போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் பிரதமரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். ஆனால், அதனைப் பாதுகாப்புப் படையினர் தடுத்துவிட்டனர்.
இதுகுறித்து பேசிய ஆதேஷ் குப்தா, "மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலை இடிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் அரசின் சிதைந்த மனநிலையை காட்டுகிறது. இச்சம்பவம் சீக்கிய சமூகத்தினரிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி நடப்பது முதல் முறை அல்ல. மூன்றாவது முறையாக நடந்துள்ளது.
பாகிஸ்தான் தன்னை ஒரு ஜனநாயக நாடு எனக் கூறுகிறது. ஆனால், இதை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கிறது. இச்சம்பவம் பலரை மனக்கசப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாகவே, பாஜக நிர்வாகிகள் தூதரகம் முன்பு ஒன்றுகூடியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: தாலிபான்களை எதிர்த்து வீதிக்கு வந்த இஸ்லாமியப் பெண்கள்