டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு முன்மொழியப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார்.
இதற்காக, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்குப் பிறகு திரவுபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஜூன் 20, 1958இல் பிறந்த முர்மு ஜார்கண்டின் முதல் பெண் ஆளுநர் ஆவார். மேலும் இவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராகவும், பிரதீபா பாட்டீலுக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராகவும் இருப்பார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை நியமிப்பது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களான கஜேந்திர சிங் ஷெகாவத், அஷ்வினி வைஷ்ணவ், கிஷன் ரெட்டி, அர்ஜுன் ராம் மேக்வால், வினோத் தாவ்டே, சி.டி.ரவி, சம்பித் பத்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட திரவுபதி முர்மு, குறித்து கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்த, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக சேர்ந்து, யஸ்வந்த் சின்ஹாவை குடியரசுத்தலைவர் வேட்பாளராக முன்மொழிந்த நிலையில், பாஜக கூட்டணியினரும் குடியரசுத்தலைவர் வேட்பாளரை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.