டெல்லி : 2019-20ஆம் ஆண்டுகளில், தேர்தல் நிதி பத்திரங்கள் வாயிலாக கட்சிகள் திரட்டிய நிதி தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்தல் பத்திரங்களில் நான்கில் மூன்று பங்கை பாஜக பெற்றுள்ளது. இது கடந்த 2017-18ஆம் ஆண்டுகளில் 21 சதவீதமாக இருந்தது. தற்போது 74 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2017-18ஆம் ஆண்டு தன்னார்வலர்கள் அளித்த நிதி மொத்தம் திரட்டப்பட்ட ரூ.989 கோடியில் ரூ.210 கோடியாக இருந்தது.
இது தற்போது ரூ.2 ஆயிரத்து 555 கோடியாக உயர்ந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் என்பது குடிமக்கள் அல்லது கார்ப்பரேட் (பெரு நிறுவனங்கள்) ஒரு வங்கியிலிருந்து வாங்கி ஒரு அரசியல் கட்சிக்கு கொடுக்கக்கூடிய நிதி பத்திரமாகும்.
இந்தப் பத்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் நான்கு முறை வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு, அவை ஜனவரி மற்றும் அக்டோபரில் மட்டுமே வழங்கப்பட்டன. இதற்கிடையில் பாஜக சமர்பித்த ஆண்டறிக்கையில் தேர்தல் பரப்புரையின் போது விளம்பரங்களுக்கு ரூ.400 கோடிக்கு மேல் செலவிடப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் மின்னணு ஊடக விளம்பரத்துக்கு ரூ.249 கோடியும், அச்சு ஊடகத்திற்கு ரூ.47.38 கோடியும் பாஜக செலவிட்டுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் சமர்பித்துள்ள அறிக்கையின்படி 2019-20ஆம் ஆண்டுகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) ரூ.29.25 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.100.46 கோடியும், திமுக ரூ.45 கோடியும், ஆம் ஆத்மி ரூ.18 கோடியும் பெற்றுள்ளன” எனத் தெரியவருகிறது.
ஆக 2019-20ஆம் நிதியாண்டில் பாஜக 75 சதவீத நிதி பத்திரமும், காங்கிரஸ் 9 சதவீத நிதி பத்திரமும் வசூலித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தேர்தல் நிதி பத்திரம்: நேர்மையான திட்டமும், நேர்மையற்ற நோக்கமும்.!