புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள குறிஞ்சி நகர், ஜீவா நந்தபுரம், ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை பாஜகவினர் பேனர் வைத்தும் பாஜக கொடிகளை கட்டியும் புதுச்சேரி பாஜக மாநிலத்தலைர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்.
இதே போன்று இன்று (ஜூன் 15) செல்லப்பெருமாள் பேட்டையில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் வளாகத்தில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கும் பாஜகவினர் கொடிகளை கட்டி, பேனர் வைத்திருந்தனர். இதற்கு அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜகவினர் சுகாதாரத்துறை ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன், தனது ஆதரவாளர்களுடன் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின் தடுப்பூசி முகாமை வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த வைத்தியநாதன் கூறியதாவது, குறிஞ்சி நகர், ஜீவானந்தம் புரம் பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமை பாஜகவினர் அரசியல் கூட்டம் நடத்துவது போல் தங்கள் கட்சி கொடிகளை கட்டியும் பேனர் அமைத்தும் தொடங்கிவைத்தனர். தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன். அரசு நடத்தும் விழாவை பாஜக நடத்துவது போல் கட்சி கொடியும் பேனரும் அமைத்து வருகின்றனர். இது உரிமைமீறல். இது தொடர்பாக சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளேன் என்றார்.