ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, "பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், மத்திய அரசின் பல நல்ல திட்டங்களையும் நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்க தொடங்கியுள்ளன.
இத்திட்டங்கள் அழிவை தருபவை என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. ஏழை மக்களின் வளர்ச்சிக்காக பாஜக போராடி வரும் வேளையில், எதிர்க்கட்சிகள் தங்களது சொந்த குடும்பத்தின் வளர்ச்சிக்காக போராடுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கின்றன" என்று தெரிவித்தார்.
செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரதமரை வரவேற்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, "சந்திரசேகர ராவ் பிரதமர் என்ற தனிநபரை அவமதிக்கவில்லை, அரசியலமைப்பை அவமதித்துள்ளார். அரசியல் தலைவர்களுக்கு பிரதமர் மோடி மரியாதையுடன் அழைப்பு விடுத்துள்ளார். இருந்தபோதும், சந்திரசேகர ராவ் அரசியலமைப்பின் நெறிமுறைகளை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டார்" என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் செயற்குழு கூட்டம் - தென் மாநிலங்களுக்கு பாஜக ஸ்கெட்சா...?