புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் என, மொத்தம் 16 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. கூட்டணி கட்சி சார்பில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, கடந்த 7ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இதற்கிடையே முதலமைச்சர் ரங்கசாமி கரோனா தொற்று பாதிப்பால், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு மூலம் பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து, தனது பலத்தை 9 ஆக பாஜக உயர்த்தியது.
அதில் துணை முதலமைச்சர் பதவியும் அடங்கும். துணை முதலமைச்சர் பதவி புதுச்சேரியில் இதுவரை இல்லை என்று முதலமைச்சர் ரங்கசாமி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். துணை முதலமைச்சர் பதவியை பாஜகவுக்குக் கொடுக்க அவருக்கு விருப்பம் இல்லை எனக் கருதப்பட்டது.
இதனால் ரங்கசாமி அதிருப்தி அடைந்தார். இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸார் தங்களை ஆலோசிக்காமல், பாஜக 3 நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர். இதனால் கூட்டணி கட்சிக்குள் பனிப்போர் தொடங்கியது. புதுச்சேரியில் எப்போதும் இல்லாத அளவில் 6 சுயேட்சை எம்எல்ஏக்கள், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
அதில் ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது மேலும் 2 பேர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 9 ஆக இருந்த பாஜகவின் பலன் 12 ஆனது. என்ஆர் காங்கிரஸூக்கு 10 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் இலாக்கா, அமைச்சர் பதவி ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கையில் மீண்டும் இழுபறி நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: மின் கட்டணம் செலுத்த மேலும் அவகாசம்