மகாராஷ்டிர மாநிலம், மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிபொருள்களுடன் கார் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சச்சின் வாஸ் எனும் காவலரை அம்மாநில காவல் துறை முன்னதாக இடைநீக்கம் செய்தது. தொடர்ந்து, மும்பை காவல் ஆணையராக இருந்துவந்த பரம்பீர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், காவலர் சச்சின் வாஸை மிரட்டி மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மாதத்திற்கு 100 கோடி ரூபாய் கேட்டதாக பரம்பீர் சிங் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார். சச்சின் வாஸை அனில் தேஷ்முக் தன் இல்லத்துக்கு பலமுறை அழைத்துப் பேசியதாகவும், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு இது குறித்து எழுதிய கடிதத்தில் பரம்பீர் சிங் குறிப்பிட்டிருந்தார்.
இச்சூழலில், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது பரம்பீர் சிங் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், முதலமைச்சர் உத்தவ் தாக்ரே இது குறித்து நியாயமான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி. பி.பி.சௌத்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈ டிவி பாரத்துக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், “மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் நேர்மறையான பிம்பத்தைக் கொண்டவர். மும்பை மாநகரின் ஆணையராகப் பணியாற்றியபோது சட்டம், ஒழுங்கை முறையாகக் கையாண்டவர். அவர் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வாய்ப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணப்பறிப்பு சம்பவத்தில் வேறு மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் சிபிஐ உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பி.பி.சௌத்ரி கோரியுள்ளார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் மீது பரபரப்பு புகார்!