பஞ்சாப், குஜராத் அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆம் ஆத்மி கட்சி தனது கருத்தை வெளியிட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.]
இச்சூழலில் குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் தங்களது முதலமைச்சர்களை முறையே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடந்த வாரம் மாற்றின. குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியை நீக்கிய பாஜக, புதிய முதலமைச்சராக பூபேந்திர படேலை நியமித்துள்ளது.
அதேபோல், பஞ்சாப் முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங்கை நீக்கி சரண்ஜித் சிங் சன்னியை புதிய முதலமைச்சராக காங்கிரஸ் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு மிகக் குறுகிய காலத்திற்கு முன் நடைபெற்ற இம்மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த மாற்றங்கள் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தனது கருத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆம் ஆத்மி கட்சியின் கோவா மாநில ஒருங்கிணைப்பாளர் ராகுல் மகம்பரே கூறியதாவது, "நாடு முழுவதும் கெஜ்ரிவால் மாடலுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கண்டு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அச்சமடைந்துள்ளன.
எனவே, அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் மாநிலங்களில் இக்கட்சிகள் அவசர அவசரமாக முதலமைச்சரை மாற்றி வருகின்றன. கோவா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மியின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என்றார்.
இதையும் படிங்க: 115 நாடுகளில் இருந்து அயோத்தி ராமர் கோயில் வந்தடைந்த புனித நீர்!