ஹைதராபாத்: 119 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா மாநிலத்திற்கு நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. முன்னதாக வேட்புமனு தாக்கல் நடைபெற்றதிலிருந்தே 119 தொகுதிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக தெலங்கானாவின் வடக்கு மண்டலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி எண் 16யைக் கொண்ட காமரெட்டி (Kamareddy) தொகுதி விளங்கியது.
இதற்குக் காரணம் தெலங்கானாவில் தொடர்ந்து இரண்டு முறையாக ஆட்சி நடத்திய பிஆர்எஸ் கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவ், தெலங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகிய இரு முதலமைச்சர் வேட்பாளர்களும் நேரடியாக மோதிக் கொண்டதால் தான் இந்த தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
சந்திரசேகர் ராவ், கஜ்மல் தொகுதியில் களமிறங்கினார், மேலும் அவர் காங்கிரஸ் தரப்பு முதலமைச்சர் வேட்பாளரான ரேவந்த் ரெட்டியுடன் மோத வேண்டும் என்பதற்காக காமரெட்டி தொகுதியிலும் போட்டியிட்டார். அதேபோல கோடங்கல் (Kodangal) தொகுதியில் களமிறங்கிய ரேவந்த் ரெட்டியும், கேசிஆர் உடன் மோத வேண்டும் என்பதற்காக காமரெட்டி தொகுதியில் போட்டியிட்டார்.
இரண்டு கட்சித் தலைவர்களும் மோதும் தொகுதி என்பதால் காமரெட்டி தொகுதியின் மீது அனைவரது கவனமும் இருந்தது. சந்திரசேகர் ராவிற்கு கஜ்மலிலும், ரேவந்த் ரெட்டிக்கு கோடங்கல் தொகுதியிலும் வெற்றி கிட்டிய நிலையில் காமரெட்டி தொகுதியில் இருவரில் ஒருவர் தான் வெல்வார்கள் எனக் கருதப்பட்டது.
ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், ரேவந்த் ரெட்டியை மூன்றாவது இடத்திற்கும், தெலங்கானா முதலமைச்சரை இரண்டாவது இடத்திற்கும் தள்ளிவிட்டு பாஜக வேட்பாளர் கடிபல்லி வெங்கட ரமண ரெட்டி (KATIPALLY VENKATA RAMANA REDDY) வெற்றி பெற்றுள்ளார். இருகட்சித் தலைவர்களையும் பின்னுக்குத் தள்ளியதால் யார் இந்த வெங்கட ரமண ரெட்டி என மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
யார் இந்த வெங்கட ரமண ரெட்டி: 53 வயதான வெங்கட ரமண ரெட்டி தொழிலதிபர் ஆவார். இவர் 12வது வரை மட்டுமே படித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவருக்கு ரூ.2.2 கோடி மதிப்பில் அசையும் சொத்தும், ரூ.47.5 கோடி மதிப்பில் அசையாச் சொத்தும் ரூ.58.3 லட்சம் கடன் இருப்பதாகவும், 11 வழக்குகள் இருப்பதாகவும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை இழந்ததன் மூலமாகத் தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்தது. அதை தெலங்கானா தேர்தல் மூலம் மீண்டும் பிடித்துவிட வேண்டும் என பாஜக தலைவர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர். இருந்த போதிலும் தெலங்கானா மாநில தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி விட்ட நிலையில், பாஜகவிற்கு மூன்றாவது இடமே மிஞ்சியுள்ளது. இருந்த போதிலும் வெங்கட ரமண ரெட்டி அனைத்து தரப்பினராலும் கவனிக்கப்படும் வேட்பாளராகியுள்ளார்.
இதையும் படிங்க: Bye Bye KCR..! சூட்கேஸ் பரிசளித்த ஒய்.எஸ்.ஷர்மிளா..! கே.டி.ஆர்.ரியாக்ஷன்!