டெல்லி : பாஜக ஆளும் ஹரியானாவில் ஆளும் அரசுக்கு எதிராக கறுப்பு கொடியேந்தி போராடிய விவசாயிகள் மீது காவலர்கள் தடியடி நடத்தினார்கள்.
காங்கிரஸ் கண்டனம்
இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, “மனோகர் லால் கட்டார் அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.
அந்த அரசு பதவியிலிருந்து இறங்க வேண்டும். உங்கள் கட்சி தாலிபான்களுடன் பேசும்போது, நீங்கள் ஏன் விவசாயிகளிடத்தில் பேச மறுக்கிறீர்கள்.
மத்திய படைகள் குவிப்பு
அதிலும் கர்னாலில் இணையத்தை முடக்கி வைத்திருப்பது சர்வாதிகாரம்” என்றார். இதையடுத்து பாரதிய கிஷான் யூனியன் ஜக்தீப் சிங் சடுனி கூறுகையில், “மகா பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் இடத்தில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய படைகள் உள்பட சுமார் 30 பட்டாலியன்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், எந்த அசம்பாவித சம்பவங்களையும் தவிர்க்கவும் நிறுத்தப்பட்டுள்ளன.
விவசாயிகள் திரள்வார்கள்
கர்னால் சந்தையை நோக்கி மக்கள் செல்வதைத் தடுக்க பல அடுக்கு தடுப்புகள் இருந்தாலும், விவசாயிகள் அந்த இடத்தை அடைவார்கள். தேவைப்பட்டால், நாங்கள் தடுப்புகளை உடைப்போம்.
விவசாயிகள் மகாபஞ்சாயத்தில் கலந்து கொள்வதை எந்தப் பாதுகாப்பும் தடுக்க முடியாது” என்றார். மேலும், “மாநிலம் முழுவதும் ஏராளமான விவசாயிகள் திரள்வார்கள்” என்றும் சடுனி எச்சரித்தார்.
கோரிக்கை
அப்போது, “கர்னல் சந்தையில் கூடிய விவசாயிகள் மீது ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று காவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஐஏஎஸ் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து, “சம்பந்தப்பட்ட அலுவலரை பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தின் போது உயிர் தியாகம் செய்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றும் கூறினர்.
இதையும் படிங்க : பொது இடத்தில் பாலியல் சேட்டை; வனக் காவலருக்கு தர்ம அடி!