ஹைதராபாத்: குஜராத் சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி (பிற்பகல் 3.15 மணி), பாஜக 132 இடங்களில் வெற்றி பெற்றதுடன் 25 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. மேலும் பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 182 இடங்களில் 132 இடங்களில் வெற்றியைப் பதிவு செய்த பாஜக, ஏழாவது முறையாக குஜராத்தின் அரியணையில் ஏற உள்ளது.
இதில் பூபேந்திர படேல் வருகிற டிசம்பர் 12ஆம் தேதி குஜராத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என குஜராத் பாஜக அறிவித்துள்ளது. இதனிடையே மிகப்பெரிய இரண்டு சாதனைகளை பாஜக நிகழ்த்த உள்ளது.
சாதனை 1: அதில் ஒன்று, அதிக ஆண்டுகள் ஆட்சி அமைத்த கட்சி என்ற பெருமையை பாஜக அடைய உள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு முதன்முதலாக குஜராத்தில் ஆட்சி அமைத்த பாஜக, 2022 தேர்தல் வரை தொடர்ந்து 32 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. அதேநேரம், இதுவரை மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், 1977ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்தது.
இந்த நிலையில் குஜராத்தில் பாஜக தனது ஆட்சியை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உறுதிப்படுத்தும் எனில், பாஜக தொடர்ந்து 37 ஆண்டுகள் ஆட்சி நடத்தி இந்திய அரசியல் வரலாற்றில் புதிய சாதனையைப் படைக்க வாய்ப்புள்ளது. இது மட்டுமல்லாமல் திரிபுராவில் மாணிக் பானர்ஜி முதலமைச்சராக 19 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்தார்.
பவன் குமார் சாம்லிங் முதலமைச்சராக, சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியில் 24 ஆண்டுகளாக ஆட்சி செய்தார். அதைத் தொடர்ந்து ஒடிசாவின் நவீன் பட்நாயக் தொடர்ந்து ஐந்தாவது முறையாக அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். கெகாங் அபாங் அருணாச்சலப் பிரதேசத்தை 22 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை 2: பாஜக நிகழ்த்தவுள்ள மற்றொரு சாதனை குஜராத்திலேயே உள்ளது. கடந்த 1985ஆம் ஆண்டில் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் மாதவ்சிங் சோலங்கி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 149 இடங்களை வென்றது. இந்த சாதனையை இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் முறியடிக்கவில்லை.
இந்த நிலையில்தான், தற்போதைய குஜராத் தேர்தலில் பாஜக 150 இடங்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பாஜக புதிய சாதனையை தேர்தல் வரலாற்றில் நிகழ்த்த உள்ளது.
இதையும் படிங்க: Gujarat Election Result: காங்கிரஸுக்கு சவால் விடுகிறதா ஆம் ஆத்மி?