டெல்லி: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்தின்போது, 21 வயதான கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை, கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுவித்தது. இவர்கள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலையாகினர்.
தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ் குஜராத் அரசு 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகளை கருணை அடிப்படையில் விடுவித்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி நேற்று(அக்.17) குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
அதில், நன்னடத்தை காரணமாக 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ததாகவும், அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் அரசின் பிரமாண பத்திரத்தை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. மேலும் குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.