டெல்லி: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்தின்போது, 21 வயதான கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை, கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுவித்தது. இவர்கள் 11 பேரும் சுதந்திர தினத்தன்று (ஆக.15) விடுதலையாகினர். குஜராத் அரசின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே தண்டனைக் குறைப்பு கொள்கையின்கீழ் குஜராத் அரசு 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி உள்ளிட்ட மூன்று பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசும், குஜராத் அரசும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
அதன்படி, குஜராத் அரசு, “குற்றவாளிகள் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை முடித்ததாலும், அவர்களின் ’நடத்தை நன்றாக இருப்பதாகக் கண்டறியப்பட்டதாலும்’ விடுதலை செய்யப்பட்டனர் என பதிலளித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் இருந்து தப்பியோடிய 12 பேருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்க இன்டர்போல் மறுப்பு