மேற்கு சம்பரான்: தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, திருப்பூரில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக அண்மையில் வதந்தி பரவியது. பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் இணையத்தில் போலியான வீடியோக்கள் பகிரப்பட்டன.
இதனால் அச்சம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இக்குற்றச்சாட்டை மறுத்த தமிழ்நாடு காவல்துறை மற்றும் மாநில அரசு, சிலர் வேண்டுமென்றே பொய்யான வீடியோக்களை வெளியிட்டு வதந்தி பரப்புவதாக விளக்கம் அளித்தது. தமிழ்நாட்டில் அனைத்து தொழிலாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தது. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறி, போலி வீடியோவை இணையத்தில் பகிர்ந்த பீகாரை சேர்ந்த யூ-டியூபர் மணீஷ் கஷ்யாப் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பீகார் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பெட்டையா பகுதியை சேர்ந்த மணீஷ் கஷ்யப் மீது பீகார் மற்றும் தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் அவர் போலீசில் சரண் அடைந்தார். போலியான வீடியோக்களை பகிர்ந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் புலம்பெயர் தொழிலாளர்களை தாக்கியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு தமிழ்நாடு முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக இணையத்தில் போலியான செய்திகள் பகிரப்பட்டன. இதுதொடர்பாக விசாரிக்க பீகார் மாநில ஐஏஎஸ் அதிகாரி பாலமுருகன் தலைமையிலான குழு தமிழ்நாட்டுக்கு சென்றது. இக்குழு திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று பீகார் மாநில தொழிலாளர்களின் நிலை குறித்து ஆராய்ந்தது. மேலும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. குழுவில் இடம்பெற்ற அதிகாரிகள், தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் போலியானவை என தொழிலாளர்களிடம் விளக்கினர். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பாஜக வதந்தியை பரப்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.