கதிஹார்: பிகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் மின் விநியோகத்தில் ஏற்படும் குளறுபடிகளைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கதிஹார் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற மின் விநியோகத்திற்கு எதிராக பார்சோய் பிளாக் அலுவலகத்தில் அதிக அளவிலான மக்கள் ஒன்று திரண்டு உள்ளனர். ஒரு கட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.
கதிஹார் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் இதுவரை ஒரு மரணத்தை மட்டுமே உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், "இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இரண்டு பேர் படுகாயமடைந்து உள்ளனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் தற்போது சம்பவ இடத்தில் முகாமிட்டு உள்ளனர். சட்டம் ஒழுங்கு நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. முழு விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது" என தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் போலீஸ் அதிகாரிகள் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகுதான் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். உயிரிழந்த 3 பேரில் இரண்டு பேர் பாசல் கிராமத்தைச் சேர்ந்த முகமது குர்ஷித் (35), சாப்பகோட் பஞ்சாயத்தைச் சேர்ந்த நியாஸ் ஆலம் (32) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மேலும், பலர் தடியடி நடத்தியதில் காயமடைந்து உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.
நேற்று (ஜூலை 26) பிற்பகல் 3 மணியளவில் அப்பகுதியில் நிலவிய ஒழுங்கற்ற மின் விநியோகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, உள்ளூர் கிராம மக்கள், பார்சோய் பிளாக் அலுவலகத்திற்கு சென்று உள்ளனர். அதேநேரம், "நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, போலீசார் எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்," என போராட்டக்காரர்களில் ஒருவர் கூறி உள்ளார். ஐந்து பேர் சுடப்பட்டதாகவும், அவர்களில் மூன்று பேர் உயிரிழந்து உள்ளதாகவும், அவர் குற்றம் சாட்டி உள்ளார். பராமரிப்பு பணி காரணமாக காலை 5 மணி முதல் 11 மணி வரை மின் விநியோகம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.
போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால் ஆத்திரமடைந்த மக்கள், பஸ்துல் சௌக் மற்றும் பிரன்பூரின் பார்சோய் பிளாக் தலைமையகம் அருகே பிரதான சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று பேரின் மரணத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அப்பகுதியில் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டு உள்ளன.
இச்சம்பவம் குறித்து மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது, “பிகார் அரசில் உள்ள இரண்டு அரசியல்வாதிகளான முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு மக்கள் மீது இரக்கமோ, பரிதாபமோ இல்லை. இது அட்டூழியங்களின் அரசாக திகழ்ந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டேட்டிங் ஆப் மூலம் மோசடி: மேற்கு வங்க பெண்ணை கைது செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார்!