வைஷாலி: மகாசிவராத்திரி பண்டிகையையொட்டி மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராயை கொலை செய்ய திட்டமிட்டதாக பிகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த மாதவ் குமார் என்ற இளைஞர் இன்று (பிப். 14) கைது செய்யப்பட்டார். இதுகுறித்து வைஷாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனீஷ் கூறுகையில், பிகார் மாநிலத்தில் 2 நாட்களுக்கு முன்பு சமூக வலைதங்களில் வீடியோ ஒன்று வைரலானது.
அந்த வீடியோவில் 4 இளைஞர்கள் ஒரு அறையில் அமர்ந்துள்ளனர். அப்போது, ஒரு இளைஞர் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற உள்ள மகாசிவராத்திரி ஊர்வலத்தின் போது மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயை கொல்ல திட்டமிடுவதுபோல விளக்கம் அளித்த காட்சிகள் பதிவாகியிருந்தன. இதுகுறித்து தகவல் தொழில்நுடப் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வீடியோ வெளியிட்டவரை தீவிரமாக தேடிவந்தோம்.
இந்த வீடியோவில் ஹாஜிபூர் பகுதியை சேர்ந்த மாதவ் குமார் என்பவர் இடம்பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணையை தொடங்கினோம். முதல்கட்ட விசாரணையில் மாதவ் குமார், மகாசிவராத்திரி பண்டிகையின் போது நித்யானந்த் ராயைக் கொலை செய்ய முயற்சித்ததைப்போல கனவு கண்டதாகவும், இந்த கனவு தொடர்ந்து 3 ஆண்டுகளாக அவருக்கு வருவதாகவும் தெரிவித்தார்.
அதோடு, இதுகுறித்து தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்துள்ளது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது நண்பர்களையும் தேடி வருகிறோம். முழுமையான விசாரணைக்கு பின்பே உண்மை தெரியவரும் எனத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயும் ஹாஜிபூர் பகுதியைச் சேர்ந்தவராவார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சிவராத்திரி விழாவின்போதும் அவர் கலந்துகொள்வது வழக்கம். இந்த வீடியோவால் இந்தாண்டு விழாவில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உத்தரகாண்ட்டில் மகளை பாலியல் வன்புணர்வு செய்த நபர் கைது