பகாஹா: பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகாஹா சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆட்கொல்லி புலி ஒன்று சுற்றித் திரிகிறது. இது கடந்த 5ஆம் தேதி சிங்கி கிராமத்தில் 12 வயது சிறுமியை தாக்கிக் கொன்றது. கடந்த 6ஆம் தேதி இரவு, ஹர்ஹியா சாரே பகுதியில் 35 வயதான ஒருவரையும் தாக்கி இழுத்துச் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் பிதியில் உறைந்துள்ளனர். இதனால் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல வனத்துறை உத்தரவிட்டது. 400-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பாலுவா கிராமத்தில் ஒரு பெண்மணியையும், அவரது மகனையும் புலி கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று(அக்.8) காலையில் வீட்டிற்குள் நுழைந்த புலி தாயையும் மகனையும் கொன்றதாக தெரிகிறது. வனத்துறையினர் கண்காணிப்பில் இருந்தபோதும் புலி தாக்குதல் நடத்தியதால் ஆத்திரமடைந்த மக்கள், வனத்துறையினரின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த ஆட்கொல்லி புலி கடந்த இரண்டு மாதங்களில் ஒன்பது பேரை தாக்கி கொன்றதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்லவும் அஞ்சி, வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய மாவட்ட வனத்துறை அதிகாரி பிரத்யுமான் கௌரவ், "அது ஒரு வன விலங்கு. அதனை மனிதர்களை போல செல்போனின் இருப்பிடத்தை வைத்து கண்டுபிடிக்க முடியாது. கால்தடத்தை வைத்துதான் பின்தொடர வேண்டும். ஆனால், இதை புரிந்து கொள்ளாமல் மக்கள் ஆத்திரமடைந்து வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர்.
பகாஹா வனப்பகுதியில் பிறந்த அந்த புலி அங்கிருந்து இடம்பெயர்ந்து, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்கே வந்துள்ளது. முன்பு வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டுமே மனிதர்களை தாக்கிய புலி, தற்போது பல்வேறு இடங்களுக்கும் சென்று மனிதர்களை தாக்குகிறது. அதனால் அது ஆட்கொல்லி புலியாக மாறிவிட்டது என்பது தெரிகிறது. அதனால் அதனை கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: நாசிக் அருகே தீப்பிடித்து எரிந்த பேருந்து ... 14 பேர் பலி