கோரக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூருக்கு, இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தின் கழிவறையில் சிகரெட் பிடித்தவர் தான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டம், மகேஷ்பூரைச் சேர்ந்தவர், கிருஷ்ண குமார் மிஸ்ரா. மும்பையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூருக்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார்.
விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, கிருஷ்ண குமார் கழிவறைக்கு சென்றார். அப்போது திடீரென தீ விபத்துக்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதனால் பயணிகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த விமான ஊழியர்கள் கழிவறைக்குச் சென்று பார்த்த போது, கிருஷ்ண குமார் சிகரெட் பிடித்தது தெரியவந்தது. உடனடியாக சிகரெட்டை அணைக்குமாறு, கிருஷ்ண குமாரிடம் விமான ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர். அவர் சிகரெட்டை அணைத்த பிறகே பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து விமானம் கோரக்பூரில் தரையிறங்கியது. பின்னர் விமான நிறுவனம் அளித்தப்புகாரின் அடிப்படையில் கிருஷ்ண குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கோரக்பூர் காவல் கண்காணிப்பாளர் விஷ்னோய் கூறுகையில், "மும்பையில் இருந்து கோரக்பூருக்கு இண்டிகோ விமானம் தினமும் இயக்கப்படுகிறது. பயணி ஒருவர் விமானத்தில் சிகரெட் பிடித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளோம்" என்றார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களூரு விமானத்தின் கழிவறையில் சிகரெட் பிடித்ததாக 24 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.