சமஸ்திபூர்: பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில், நான்கு வயது சிறுவன் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்திபூர் மாவட்டத்தின் பிதான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிம்ஹா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் சிஹாமா பகுதியைச் சேர்ந்த விபின் குமாரின் 4 வயது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட சிறுவன் தனது தாத்தாவைப் பார்க்கச் சென்றதாகவும், அப்போது துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் குழந்தையின் வாயில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு நான்கு வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது குறித்து பிதான் காவல் நிலையப் பொறுப்பாளர் விஷால் குமார் சிங் கூறுகையில், “கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சிறுவனின் உறவினர்கள் இன்னும் சம்பவம் குறித்து புகார் அளிக்கவில்லை.
புகார் அளித்தவுடன் வழக்குப் பதிவு செய்யப்படும். சிறுவனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என தெரிவித்தார். பின்னர் விஷால் குமார் சிங் மருத்துவமனைக்கு வந்து சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் நாகபஞ்சமி திருவிழாவிற்கு சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவிழாவில் நடைபெற்ற கண்காட்சியை பார்த்துவிட்டு சிறுவன் திரும்பி வந்தபோது பக்கத்தில் உள்ள ராமானந்த் என்பவரின் கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அந்த கடையில் இருந்த யாதவின் மகன் கவுரவ் என்ற சோட்டு சிறுவனை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சிறுவன் வாயில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
பின்னர் சிறுவனை மீட்டு ஹாசன்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். நான்கு வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய வேண்டிய காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.