பீகார்: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல், பல்வேறு சறுக்கல்களைக் கடந்து கட்சியை மீட்டு வரும் காங்கிரஸ் கட்சியும், மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
2024 பொதுத்தேர்தலில் பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைத்துள்ளது காங்கிரஸ். அதன்படி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் முதற்கட்டமாக பாட்னாவிலும், இரண்டாம் கட்டமாக பெங்களூரிலும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில், மக்களவைத் தேர்தல் தொடர்பாக விவாதித்துள்ளனர். மூன்றாம் கட்டமாக வரும் 31ஆம் தேதி மும்பையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், இந்தியா கூட்டணி சார்பில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. அதேபோல் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் நிதிஷ்குமார் அறிவிக்கப்படுவார் என பேசப்பட்டது. பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்தியா கூட்டணிக் கட்சிகளை நிதிஷ்குமார் ஒருங்கிணைத்தார் என ஏற்னகவே பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழலில், நேற்று(ஆகஸ்ட் 28) நிதிஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தான் எதுவும் ஆக விரும்பவில்லை என்றும், தனக்கு அவ்வாறு எந்த ஆசையும் இல்லை என்றும் கூறினார். தான் அனைவரையும் ஒன்றிணைக்க மட்டுமே விரும்புகிறேன் என்றும் கூறினார்.
இந்த நிலையில், நிதிஷ்குமாருக்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை உள்ளது என ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "நிதிஷ்குமார் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என மக்கள் கருதுவதாக அமைச்சர் ஷ்ரவன் குமார் அண்மையில் கூறியிருந்தார். ஷ்ரவன் குமாரின் கருத்தை நிதிஷ்குமாரின் கருத்தாகத்தான் பார்க்க முடியும். அவர் இல்லை என்று கூறுவதில், மறைமுகமாக ஆம் என்ற பதில் உள்ளது. அவருக்கு பிரதமராக விருப்பம் இல்லை என்றால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க அவர் ஏன் கஷ்டப்பட வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.