பீகார்: பீகார் மாநிலத்தில், பள்ளி ஆசிரியர்கள் நியமனம், இடமாற்றம் தொடர்பான விதிகளில் அம்மாநில அரசு அண்மையில் சில மாற்றங்களை செய்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பிபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பீகார் அரசைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன.
அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று(ஜூலை 13) ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு விவகாரம் தொடர்பாக மாநில அரசைக் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டக்காரர்கள் காந்தி மைதானத்திலிருந்து அம்மாநில சட்டப்பேரவையை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கூட்டத்தைக் கலைக்க தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். மேலும், போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றபோது, போலீசார் தடியடி நடத்தினர். இதில், பாஜக எம்.பி. ஜனார்தன் சிங் சிக்ரிவால் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் காயமடைந்தனர். பலரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
போலீசார் தடியடியில் படுகாயமடைந்த பாஜக நிர்வாகி விஜய் குமார் சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த விஜய் குமார் சிங், பாஜகவின் ஜெகனாபாத் மாவட்டச்செயலாளர் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக நிர்வாகி விஜய் குமார் சிங் இறப்புக்கு பீகார் மாநில அரசே காரணம் என்றும் பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பாட்னாவில் பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம், மாநில அரசின் தோல்வியைக் காட்டுகிறது. ஊழல் கோட்டையை காப்பாற்ற ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது, பீகார் மாநில அரசு. குற்றப்பத்திரிகையில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்காக பீகார் முதலமைச்சர் தனது அறத்தை மறந்துவிட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சரும், பாஜக எம்.பி.யுமான சுஷில் மோடி தனது ட்விட்டரில், "பாட்னாவில் போலீசாரால் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி விஜய் குமார் சிங், கொடூரமான தடியடி காரணமாக உயிரிழந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.