லக்னோ: நவாப்களின் நகரம் என அழைக்கப்படும் லக்னோவில் பல சரித்திர கால சின்னங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான சின்னம்தான் ஹுசைனாபாத் மணிக்கூண்டு.
இந்த மணிக்கூண்டு ஹுசைனாபாத் பகுதியில் அமைந்துள்ளது. அதன் கட்டடக் கலை காண்போரை வியக்க வைக்கிறது. ரூமி தர்வாசா, படா இமாம்படா, தீலி வாலி மஸ்ஜித் அருகே இந்த மணிக்கூண்டு அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.
1882-1887க்குள் ஹுசைனாபாத் அறக்கட்டளை சார்பாக இந்த மணிக்கூண்டு கட்டிமுடிக்கப்பட்டது. அப்போது ஆளுநர் பொறுப்பில் ஜார்ஜ் கூப்பர் இருந்தார். இதை கட்டி முடிக்க அப்போதே 1.75 லட்ச ரூபாய் செலவானது. பெரிய வசதிகள் ஏதும் இல்லாத காலத்தில், இப்படி ஒரு உயர்ந்த கோபுரத்தை எப்படி கட்டினார்கள் என்பதே பலருக்கும் வியப்பாக உள்ளது. பிரிட்டிஷின் கட்டட கலைக்கு இந்த மணிக்கூண்டு ஒரு முக்கிய உதாரணம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலகிலேயே இதுபோல் மூன்று மணிக்கூண்டுகள்தான் உள்ளன. இந்தக் கட்டடம் பொறியாளர் பிரெட்ரிக் வில்லியம்ஸ் தலைமையில் கட்டப்பட்டது. இதிலுள்ள கடிகாரம் பிரிட்டனின் ஜேடபிள்யூ பெஸ்ஸான் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிக உயரமான மணிக்கூண்டு இதுதான்.
1984ஆம் ஆண்டு இந்த மணிக்கூண்டு கடிகாரம் நின்றுபோனது. அதை மாற்றும்படி உள்ளூர்வாசிகள் கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு 18 லட்ச ரூபாய் செலவு செய்து ஒரு பொறியாளர் அதற்கு உயிர்கொடுத்தார். 2010 ஏப்ரல் 13ஆம் தேதி முதல் கடிகாரம் மீண்டும் இயங்கத் தொடங்கியது.