மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 எம்எல்ஏக்கள் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில், 32 பாஜக எம்எல்ஏக்களும், 6 ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களும், 7 தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏக்களும் இருந்தனர்.
இதில் நேற்று(செப்.2) ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் 5 பேர், அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இது ஐக்கிய ஜனதா தளத்திற்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
பிஹாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, புதிய ஆட்சியை அண்மையில் அமைத்தார். நிதிஷ்குமார், துணை குடியரசுத் தலைவராக ஆசைப்பட்டதாகவும், அது நிறைவேறாமல் போனதாலேயே அவர் பாஜகவுடனான கூட்டணியை முறித்ததாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
பிஹாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்ததற்காகவே, மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளத்தை பலவீனப்படுத்த பாஜகவினர் நடவடிக்கை மேற்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த மாதம் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்த ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரே எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மணிப்பூரில் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது குறித்து, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "நாங்கள் பிஹாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகியபோது, மணிப்பூரில் உள்ள எங்களது 6 எம்எல்ஏக்களும் எங்களை நேரில் சந்தித்து, எங்களுடன் இருப்பதாக ஆதரவு தெரிவித்தனர். அப்படி இருக்கையில் மணிப்பூரில் இப்போது என்ன நடந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவர்கள் எங்களது எம்எல்ஏக்களை எங்களிடமிருந்து பிரித்துச்செல்வது, அரசியலமைப்புச்சட்டப்படி சரியானதா?" என்று தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் நிதிஷ்குமார் வலியுறுத்தினார்.