பீகார்: பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கௌர் சந்த் பகுதியைச் சேர்ந்தவர் பாடகி நிஷா உபாத்யாய். பிரபல போஜ்பூரி பாடகியான இவர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று பாடி வருகிறார். இவருக்கென அப்பகுதியில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் மிகவும் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்து இளைஞர்கள் மத்தியில் புகழ்பெற்றுவிட்டார் என தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி இரவு, சரண் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று பாடுவதற்காக நிஷா சென்றிருந்தார். நிஷா மேடையில் ஏறி தனது போஜ்பூரி பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். ரசிகர்கள் அனைவரும் அவரது பாடல்களை ரசித்து ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கூட்டத்தில் இருந்த சிலர் நிஷாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
அதில், நிஷாவின் தொடையில் குண்டு பாய்ந்தது. அவர் மேடையிலேயே சரிந்து விழுந்தார். அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் பாடகி நிஷாவை மீட்டு பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: காதலை முறித்த ஆத்திரத்தில் கத்திக்குத்து... 12 முறை கத்தியல் குத்திய கொடூரம்!
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கர்கா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நிகழ்ச்சியின்போது கொண்டாட்ட மனநிலையில் இருந்த சிலர் விளையாட்டாக சுட்டதில் இந்த விபரீதம் நடந்ததுள்ளதாக தெரியவந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக பீகாரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஓட ஓட விரட்டி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போஜ்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்து. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவரை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து அவரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினர். பிறகு தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
ஆயுதச் சட்டத்தில் திருத்தம்: பீகாரில் பொது நிகழ்ச்சிகளில் துப்பாக்கியால் சுடும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில ஆயுதச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, திருமணம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் உரிமம் பெற்றவர்களும் துப்பாக்கியால் சுடுவது குற்றம் அறிவிக்கப்பட்டது. இந்த சட்டத்தை மீறி பொது நிகழ்ச்சிகளில் துப்பாக்கியால் சுட்டால், அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: Bihar : பஞ்சாயத்து தலைவரின் கணவர் நடுரோட்டில் சுட்டுக் கொலை! அரசியல் போட்டியா?