பரத்பூர்: ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள லோஹாருவில் இன்று (பிப். 17) காருடன் எரிந்த நிலையில் 2 உடல்கள் இருந்துள்ளன. இதைக்கண்ட கிராம மக்கள் அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட தகவலில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நசீர் (25), ஜுனைத் (35) ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் 2 பேரும் நேற்று (பிப். 16) அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் பிவானி போலீசார், பரத்பூர் போலீசாருக்கும், இவர்களின் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் பரத்பூர் போலீசார் சம்பவயிடத்துக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்ய உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில், இவர்களுக்கும் பஜ்ரங் தள் கட்சியை சேர்ந்த லோகேஷ், ரின்கு சைனி, ஸ்ரீகாந்த், மோனு மானேசர் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது தெரியவந்துள்ளது. இதனால் இவர்கள் மீது ராஜஸ்தான் மாநிலம் கோபால்கர் போலீசார் , இந்திய தண்டனைச் சட்டத்தின் 143, 365, 367, மற்றும் 368 ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும் யாரும் கைது செய்யப்படவில்லை.
இதனால் நசீர், ஜுனைத் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவித்ததுடன், பஜ்ரங் தள் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் எரிவாயு டேங்கர் லாரி வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு