இந்திய அளவில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடத்தை அளித்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கர் தான், இந்திய அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கிய சட்டமேதை அம்பேதகரின் 66 ஆவது நினைவு நாள் இன்று (டிச.6) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
பல அரசியல் தலைவர்களும் அம்பேத்கரின் நினைவுநாள் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் சமத்துவம் பேசப்படுகிறது என்றால் அதற்கு காரணம் அம்பேத்கர் எழுதிய சட்டம் தான்.
ஆங்கிலேயரின் ஆட்சியில் இந்தியா இருந்த போது மத்திய பிரதேசத்தில் அம்பாவாதே கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று பிறந்தார். சிறுவயது முதல் சாதிய ஒடுக்கு முறைகளுக்கு ஆளான அம்பேத்கர் அதற்கு எதிரான ஆயுதமாக கையில் எடுத்து போராட ஆரம்பித்தார்.
பள்ளி, கல்லூரி, பணி என செல்லும் அனைத்து இடங்களிலும் அம்பேத்கரின் சாதிய பாகுபாடால் ஒதுக்கப்பட்டார். இத்தனை துன்பியல்களுக்கு மத்தியிலும் இளங்கலை முடித்து பரோடா மன்னரின் உதவியுடன் அமெரிக்கா சென்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். அம்பேத்கர் அறிவு மீது கொண்ட தீராத தாகத்தினால் பல பட்டப்படிப்புகளை கற்றுத் தேர்ந்தார்.
இந்தியா விடுதலை அடைந்தவுடன் நாட்டின் முதல் சட்ட அமைச்சராக பதவியேற்றார். பின்னாளில் இவர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டம் 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய மக்களின் வாழ்வியலை அடிநாதத்தில் இருந்து கணித்து தொலை நோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டம் . உலகிலேயே சிறந்த அரசியலமைப்பு சட்டங்களில் இந்தியாவின் சட்ட அமைப்பு சிறப்பாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
புத்த மதத்திற்கு மாறிய பீமராவ்: இயல்பாகவே அம்பேத்கர் பழங்கால இந்தியா குறித்தும், இங்கு வாழ்ந்த மக்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வந்தார். இவரது ஆய்வில் இந்தியாவில் பெரும்பாலானோர் புத்த மதத்தை பின்பற்றியதை அறிந்தார். புத்த மதத்தை அழிப்பதற்காகவே பல வேலைகள் நடந்துள்ளதாகவும் கண்டறிந்தார். இது குறித்து யார் சூத்திரர்கள் (Who were the Shudras?) என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். மேலும் அம்பேத்கர் தலைமையில் 1935 ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் புத்த மதத்தை தழுவினர்.
சிறுவயது முதலே இந்து மதத்தில் அடிமைகளாக நடத்தப்பட்ட அம்பேத்கரின் மனதில் இந்த எண்ணம் ஆணித்தனமாக பதிந்து இருந்தது. எனவே இந்த முடிவுக்கு வந்தார். அந்த சூழ்நிலையில் பல மேல் சாதியினர் அம்பேத்கர் மீது தீராத கோபத்தில் இருந்தனர்.
அனைவருக்குமான தலைவர்: இந்தியாவில் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டும்தான் போராடியுள்ளார் என்ற ஒரு மாய பிம்பம் இருந்து வருகிறது. இது முற்றிலும் தவறாகும். இருப்பினும் தொழிலாளர்கள் நலன், பெண்கள் நலன் என இவரது ஆதரவுக் குரல் வலுத்து இருந்தது. அரசியலமைப்பு சட்டம் என்பது வெறும் பொருளாதாரம் அடிப்படையில் மட்டும் அமையக் கூடாது எனவும், அவ்வாறு அமைந்தால் ‘சாணிக்குவியல் மீது அரண்மனை’ போன்று உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்து மதத்தின் மீது பல குற்றங்களை அடுக்கிய அம்பேத்கர்தான் இந்து சட்ட மசோதவை இயற்றினார். இதன் மூலம் பெண்களுக்கு சொத்துரிமை, ஆண் மற்றும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்தினார்.
சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று அவரது பதவியை ராஜினாமா செய்தார். இதற்காக அவர் கூறிய காரணங்கள், ‘இந்து சட்டத்தை நிறைவேற்றி பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்க வேண்டும். OBC ஆணையம் அமைத்து அச்சமுதாய மக்கள் தொகையைக் கணக்கெடுத்து OBC மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். காஷ்மீர் பிரச்சனையில் அம்மாநில மக்களுக்கு முழு உரிமை வழங்க வேண்டும்’ ஆகியவற்றையே கூறினார். இத்தனை மறுமலர்ச்சி காரியங்களை அனைத்து தரப்பு மக்களுக்காக செய்த அம்பேத்காரை தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் என ஒதுக்குவது அறியாமை ஆகும்.
அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 இல் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அம்பேத்கரின் முக்கிய நோக்கமாக கருதப்பட்ட ஒடுக்கப்பட்டோருக்கான வாய்ப்பு தற்போது அளிக்கப்பட்டாலும், இன்றும் பல இடங்களில் அவர்களுக்கு எதிரான அடக்குமுறை, வன்முறை என நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் அம்பேத்கரின் 66 ஆவது நினைவு நாளான இன்று அவரின் சிந்தனைகளையும், சமத்துவத்தையும் கடைபிடிப்போம்.
இதையும் படிங்க:'ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்' முதலமைச்சர்